வருவாரு ஆனா..

வருவாரு ஆனா..
Published on

மீண்டும் ரஜினிகாந்த் அரசியல் உலகின் கவனத்தைத் தன்பால் திருப்பியிருக்கிறார். லிங்கா படத்துக் கான பாடல்கள் வெளியீட்டுவிழாவில் அரசியலுக்கு வருவது பற்றி மீண்டும் அவர் கோடி காட்டிப் பேசியிருக்கிறார்.

“என்னைப் பற்றி எனக்கே தெரியாது. சூழ்நிலை தான் என்னை இங்கு கொண்டு வந்து வைத்திருக்கிறது. நாளைக்கும் ஒரு சூழ்நிலை தான் தீர்மானிக்கும். அரசியல் பற்றி கொஞ்சம் எனக்கு தெரியும். எவ்வளவு ஆழம், ஆபத்து என்று தெரியும். யார் யார் தோள் மீது எல்லாம் மிதித்து அங்கே போகணும் என்று எனக்கு தெரியும். அவ்வாறு போனால் கூட, அங்கு சென்று நினைத்ததை எல்லாம் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. காற்று அழுத்த தாழ்வு நிலை என்பது தானாகவே அமையும். அரசியலில் ஆழத்தை நினைத்து தயங்குகிறேன். அரசியலை நினைத்து பயப்படவில்லை, தயங்குகிறேன் அவ்வளவு தான்.” என்றவர்

“இவ்வளவு பேர் அரசியல் என்று பேசியதால், பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. பேசாமல் போய் இருந்தால் திமிராகி விடும். எது இருந்தாலும் கடவுள் தீர்மானிப்பார். அது என்னவோ எனக்கு தெரியாது. என்னவாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வேன்” என்று அவர் பேசிவிட்டுப் போய்விட அரசியல் விமர்சகர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டனர். ரஜினி ரசிகர்கள் உற்சாகப் பட்டனர். ‘இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது’ என்று கிண்டல் அடித்தனர் பலர்.

அன்று மேடையில் பேசிய பலரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று பேசியதன் எதிர்வினையாக அவர் இப்படிப் பேசினாரென்றாலும் கூட இன்றைய அரசியல் சூழல் அதற்கு பெரிய முக்கியத்துவத்தை வழங்கியிருக்கிறது.

பல அரசியல் கட்சித் தலைவர்களும் இதுபற்றிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். நடிகர்களுக்கு அரசியல் ஆழம் தெரியாது என்று திமுக பொருளாளர் ஸ்டாலினும் அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என்று புதிய தமிழக காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவனும் கூறி இருக்கின்றனர்.

1996-ல் இருந்ததுபோல் ஒரு சூழல் இப்போது இல்லை. அன்று இருந்த அரசியல் சூழலில் முதல்வர் ஜெயலலிதாவை மேடையில் துணிச்சலாக விமர்சித்தார்.  திமுக தமாகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் அரசியல் அவருக்கு சிலபாடங்களைக் கற்றுத் தந்தது. அதை அடுத்து மீண்டும் முதல்வரான ஜெயலலிதாவை தைரியலட்சுமி என்று மேடையிலேயே வாழ்த்தி உறவுகளைச் சரி செய்துகொண்டார். இன்றுவரை எல்லா அரசியல் தலைவர்களுடன் நல்லுறவைப் பேணிவருகிறார். நரேந்திர மோடி வீடு தேடி வந்தபோதும் கூட வெளிப்படையாக அவர் தன் ஆதரவைத் தெரிவிக்கவில்லை.

இன்று இருக்கும் சூழ்நிலையில் அரசியல் கணிப்பாளர்கள் ரஜினிகாந்தை எப்படியும் தங்கள் தரப்புக்கு இழுத்துவர பாஜக காய்நகர்த்திக் கொண்டுவருவதாகவே கருதுகிறார்கள். மோடியின் பாஜக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செய்யும் கட்சிகளை நகர்த்திவிட்டு தன் செல்வாக்கை வளர்த்துவருகிறது. இந்த பாணியில் தென்னிந்தியாவில் அது படுபலவீனமாக இருக்கும் மாநிலமான தமிழ்நாட்டில் கால்  ஊன்றுவதற்கு திட்டமிட்டு வருகிறது. அதில் ரஜினிக்கு வைத்திருக்கும் குறியும் ஒன்றாகும். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார். அவர்  வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவானால் அதைவிட சிறந்த வாய்ப்பு பாஜக இங்கே கால் ஊன்றுவதற்குக் கிட்டாது என்பதால் ரஜினியின் அரசியல் பேச்சு அக்கட்சியினருக்கு ஆவலை ஊட்டியிருக்கிறது.

ரஜினியின் உச்சகட்ட செல்வாக்கு நிலவிய 96-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தமிழக அரசியலிலும் பெரும் மாறுதல்களுக்கான களங்கள் உருவாகி உள்ளன. திமுகவில் 90 வயதான கருணாநிதிதான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று முக ஸ்டாலின் சொன்னாலும் அக்கட்சியின் தலைமை ஸ்டாலின் வசமே அதிகார பூர்வமற்ற நிலையில் உள்ளது. முன்பு மூப்பனார் ஆரம்பித்து வெற்றி கண்ட தமாகாவுக்கு ஜிகே வாசன் உயிரூட்டி இருக்கிறார். புதிதாக கட்சி ஆரம்பித்து சுமார் 10 சதவித வாக்கு வங்கியை வைத்திருப்பதுடன் எதிர்க்கட்சித்தலைவர் என்ற அந்தஸ்துடன் விஜயகாந்த் உருவாகி இருக்கிறார். ரஜினி செய்யத் தவறியதை செய்து காட்டியவராக அவர் இன்று இருப்பதாகச் சொல்லலாம்.

96-ல் பெரும் வேகத்துடன் வளர்ந்துகொண்டிருந்த கட்சியாக இருந்த மதிமுகவை பின்னுக்குத் தள்ளியது ரஜினி அன்று திமுக- தமாகா கூட்டணிக்கு அளித்த ஆதரவு. மதிமுகவின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் சுருங்கிப் போவதற்கு அந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனதும் ஒரு காரணம் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட  வாதம். இன்று ரஜினி நான் அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன் என்று சொல்லும்போதெல்லாம் மதிமுக பொதுச்செயலாளர் மனசுக்குள் உழன்று கொண்டிருக்கலாம்.

எந்திரன் படத்துக்குப் பின்னர் ரஜினி மிக மோசமான உடல்நலைப் பாதிக்குள்ளாக்கி இன்று கிட்டத்தட்ட புனர் ஜென்மம் எடுத்தவராக வாழ்ந்துகொண்டிருக்கிறார். லிங்கா படம் பெரு வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயம் அவருக்கு கோச்சடையான் பெற்ற தோல்வியால் உருவாகி இருக்கிறது. அதற்காக தன்னை பரபரப்பாக்கிக்கொள்ள அரசியல் பேசுகிறார் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் எம்ஜிஆர், ஆந்திராவில் என்.டி.ஆர். என அரசியலில் வெற்றி பெற்ற முன் மாதிரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாய்ப்புகள் வந்தபோது அதுபற்றி யோசிக்காமல் உடனே அரசியலில் குதித்தவர்கள்.

காலம் சிலருக்கு வாய்ப்புகளை ஒரே ஒருமுறை தான் தரும் என்றில்லை. பலமுறை தரவும் செய்யும். ரஜினிக்கு இது மீண்டும் காலம் அளிக்கும் அரசியல் வாய்ப்பாக இருக்கலாம்.

டிசம்பர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com